சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் இந்தப் படத்தை முதலில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘தலைவர் 173’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்காமல், பிற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இணையும் முதல் நாளிலேயே மாஸ் ஓப்பனிங் பாடல் காட்சியுடன் அவரது பகுதிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
