நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி அவர் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது தனது அடுத்த படமான ‘இரண்டு வானம்’ குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “சமீபத்தில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்தை முழுமையாக பார்த்தேன். படம் பார்த்தபோது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தப் படத்திற்காக மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறேன். இயக்குநர் ராம்குமார் உருவாக்கிய இந்தக் கதை எனக்குள் ஆழமான வலியையும் உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் இந்தப் படத்தை திரையில் பார்க்கும்போது, அதிலிருக்கும் காதல், வலி மற்றும் உணர்வுகளை நிச்சயம் உணர்வார்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
