மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மடோனா செபாஸ்டியன், தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ப பாண்டி’, ‘ஜூங்கா’, ‘வானம் கொட்டட்டும்’, ‘லியோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘ஹார்டின்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. குறும்படங்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கிய அனுபவம் கொண்ட கிஷோர் குமார், இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்த சனந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதில் இமயா, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் மூலம் அவர் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர். ரவீந்திரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.
‘ஹார்டின்’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “இது ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகும் திரைப்படம். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இதனை உருவாக்கி வருகிறோம். சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகளான இமயா, திரைக்கதை நுட்பங்களை பாடமாக எடுத்து நியூயார்க்கில் படித்துவிட்டு வந்துள்ளார். அதனால் இந்த திரைப்படத்தின் திரைக்கதையிலும் அவரது பங்களிப்பு உள்ளது. மேலும், இந்த திரைப்படம் இரண்டு பெண்களின் பார்வையில் சொல்லப்படும் கதையை கொண்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ‘ஹார்டின்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். வருகிற ஜூன் 26-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம், காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை கவரும் படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவி வருகிறது.
