கவுதம் கார்த்திக் நடித்த ‘ரங்கூன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘ஓம்’. இந்த திரைப்படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா சென்னை ஐடிசி சோழா ஸ்டார் ஓட்டலில் நடைபெற்றது. ஆனால், நடிகர் தனுஷ், மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களும், இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மட்டுமே கலந்துகொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டு அதன் பின்னணி குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “’ஓம்’ என்ற தலைப்பு ஆன்மிகம் தொடர்பான திரைப்படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இது உணர்வுப்பூர்வமான கதையை மையமாகக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தின் பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டோம். தற்போது சுமார் 65 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் தனுஷ் நடித்த திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இது இருக்கும். அதற்கு படத்தின் கதைக்களம், நடிகர்கள் தேர்வு மற்றும் படத்தின் பரந்த அளவிலான தயாரிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. மேலும், தற்போதைய சினிமா வணிகமும் முன்பை விட அதிகளவில் வளர்ச்சி பெற்றுள்ளது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த திரைப்படத்தில் மம்முட்டி ‘கார்த்திகேயன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிப்போம். சூழ்நிலை காரணமாக கடந்த ஆறு மாதங்களாக மம்முட்டியை என்னால் நேரில் சந்திக்க முடியவில்லை. ஒரு நாள் அவர் சென்னை வந்தபோது என்னிடம் கதையை கேட்டார். சில சந்தேகங்களை கேட்ட பிறகு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்தார். தனுஷ் மற்றும் மம்முட்டி ஆகிய இருவரும் தேசிய விருது பெற்ற நடிகர்கள். தங்களது கதாபாத்திரங்களை முழுமையாக உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
மேலும், “தற்போது ஸ்ரீலீலா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தி வருகிறேன். அவர் நடனத்தில் மட்டுமல்லாமல், நடிப்பிலும் திறமையானவர். இந்த திரைப்படம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் நடைபெற்ற செம்மரக் கடத்தல் மற்றும் என்கவுண்டர் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதா என்று பலர் கேட்கிறார்கள். டீசரில் சில விஷயங்களை மட்டும் காட்டியுள்ளோம். சில உண்மைச் சம்பவங்களின் தாக்கத்தில் இந்தக் கதை உருவாகியுள்ளது. நான் இயக்கிய ‘அமரன்’ ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். ஆனால் ‘ஓம்’ அதுபோன்ற திரைப்படம் அல்ல. உண்மைச் சம்பவங்கள் பல இருந்தாலும், அவற்றை எவ்வாறு திரைக்கதையாக மாற்றுகிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் தமிழர்களை எந்த இடத்திலும் தவறாக சித்தரிக்கவில்லை. திருவண்ணாமலைக்கும் இந்தக் கதைக்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. ஆனால் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் அண்ணாமலையா என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாது,” என்று கூறினார்.
