‘எட்டு தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நடிகர் வெற்றி, தற்போது கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. அதிரடி மற்றும் திரில்லர் அம்சங்கள் நிறைந்த இந்த திரைப்படத்தை தீரன் அருண்குமார் எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ. வெங்கடேஷ், விஜய் டிவி ராமர், சபிதா ராய், ஜீவா ரவி, அஜித் விக்னேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி வழங்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ்குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், “ஒரு இளைஞனுக்கும், நிழல் உலகில் செயல்படும் சர்வதேச வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் மோதலே இந்த திரைப்படத்தின் மையக் கதையாகும். நம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு விஷயம் எவ்வாறு உலகளாவிய வணிகமாக மாறுகிறது என்பதையும், அதன் பின்னணியில் செயல்படும் சக்திவாய்ந்த நிழல் உலக வலையமைப்புகளையும் புதுமையான கதைக்களத்தின் மூலம் இந்த திரைப்படம் எடுத்துரைக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு கல்வியறிவு பெற்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், தனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்கான காரணத்தைத் தேடி எந்த அளவிற்கு துணிந்து செயல்படுகிறான் என்பதே இந்த திரைப்படத்தின் முக்கியக் கருவாக அமைந்துள்ளது. சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறிய விஷயம் எவ்வாறு மிகப்பெரிய உலக வர்த்தகமாக வளர்கிறது என்பதையும், அதன் பின்னணியில் செயல்படும் மாபியா அமைப்புகளையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதிரடி காட்சிகள் மற்றும் பரபரப்பான திரைக்கதையால் கவனம் பெற்றுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூலை 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
