‘மகுடம்’ படத்தின் ‘ரைஸ் ஆப் லிங்கா’ பாடலை வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை துஷாரா விஜயன் நடித்துள்ள நிலையில், நடிகை அஞ்சலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், திரைப்படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் தானே ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த தீபாவளி தினத்தில் வெளியிட்ட அவர், படத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் விஷால் இந்த திரைப்படத்தை முன்னெடுத்து வருகிறார்.

இதற்கிடையில், திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் தொடர்ந்து 17 இரவுகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் உருவாக்கப் பின்னணி காணொளியை விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த காணொளி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

மேலும், உலகம் முழுவதும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ‘மகுடம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரைஸ் ஆப் லிங்கா’ பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading