தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜீவா, தற்போது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஜீவாவின் 47வது படமாக உருவாகி வருகிறது. முன்னதாக இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா மற்றும் ராஜேஷ் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலரும் முக்கிய மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இந்த நிலையில் தற்போது ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தின் டீசர் வருகிற 21-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இந்த திரைப்படத்தின் டீசரை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
