தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஆஷிகா ரங்கநாத், ‘கிரேசி பாய்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘விஸ்வம்பரா’, ‘காதவைபவா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் அதர்வாவுடன் ‘பட்டத்து அரசன்’, சித்தார்த்துடன் ‘மிஸ் யூ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘சர்தார் 2’ படத்திலும் இடம்பெற்றிருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சினிமாவில் இருப்பதே பெரும் பாக்கியம் என்று ஆஷிகா ரங்கநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சினிமா என்பது ஒரு பெருங்கடல். அதில் நீந்துவது பெரிய விஷயம். ரசிகர்களின் அன்பைப் பெறுவதற்குப் போராட வேண்டும். அத்தகைய அன்பு கிடைத்துவிட்டால், அந்தப் பிரபலம் அதிர்ஷ்டசாலிதான்.
ரசிகர்களின் அளவற்ற அன்பு, மரியாதை, புகழ், பெருமை, பணம் எனப் பல விஷயங்கள் திரைப் பிரபலங்களுக்குக் கிடைக்கின்றன. இதைப் பார்க்கும்போது ஒவ்வொரு திரைப் பிரபலமும் அதிர்ஷ்டசாலிதான். அந்த வகையில், சினிமாவில் இருப்பது பெரும் பாக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
