‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மீரா கதிரவன், தற்போது ‘ஹபீபி’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஈஷா எம், மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, சுதாகரன், அனுஸ்ரீயா ராஜன், இஸ்மத் பானுரேகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நேசம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடையநல்லூரில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கஸ்தூரி ராஜாவின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. மேலும், இந்த திரைப்படம் அதன் இயல்பான கதையமைப்பு மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், கஸ்தூரி ராஜாவின் மகனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான தனுஷ், ‘ஹபீபி’ திரைப்படக் குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹபீபி திரைப்படத்தில், தனக்குத் தெரியாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து ‘யூசுப்’ என்ற கதாபாத்திரமாக முழுமையாக வாழ்ந்திருக்கும் என் தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும், மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்ததோடு, ஒரு சிறப்பான திரைப்பட அனுபவத்தையும் வழங்கிய இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
