சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்த நடிகை கயாடு லோஹர்!

கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் நடிகையாக அறிமுகமான கயாடு லோஹர், அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றார். அதைத் தொடர்ந்து, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். அதில், “சமூக ஊடகங்களிலிருந்து சிறிது காலம் விலகி இருக்கிறேன். சில நேரங்களில் உடலுக்கு ஓய்வு தேவைப்படுவது போல, மனதிற்கும் ஓய்வு அவசியம். வாழ்க்கையின் வேகத்தை சற்று குறைத்து, திரைக்கு அப்பால் இருக்கும் நிஜ வாழ்க்கையுடனும், என்னுடனும் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பதிவில், “எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து, அன்பையும் ஊக்கத்தையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை. நான் சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருக்கமாட்டேன். இருப்பினும், முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருந்தால், எனது குழுவினர் இந்தக் கணக்கின் மூலம் பகிர்வார்கள். அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் அன்பும் கிடைக்கட்டும். விரைவில் மீண்டும் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கயாடு லோஹரின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் மீண்டும் சமூக ஊடகங்களுக்கு திரும்ப வேண்டும் என தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading