ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரணபாலி’. இதில் விஜய் தேவரகொண்டா போராளி ரணபாலியாகவும், ராஷ்மிகா அவரது மனைவி ஜெயம்மாவாகவும் நடித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பின்னணியில், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் ஜெயம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் தாக்கத்தால், ராஷ்மிகா மந்தனா 400 ஏழைக் குடும்பங்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அந்தக் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை மாவு, கேழ்வரகு உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளார். மேலும், இந்த உதவித் திட்டத்தை அடுத்த ஓராண்டுக்குத் தொடர்ந்து செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஷ்மிகா கூறுகையில், “உதவி செய்வதற்குப் பெரிய தொகையோ, மிகப்பெரிய முயற்சியோ தேவையில்லை. சிறிய உதவிகூட ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். என்னுடைய இந்தச் செயல் மற்றவர்களுக்கும் உதவும் எண்ணத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார். திரையில் ஏற்ற கதாபாத்திரத்தின் தாக்கத்தால் நிஜ வாழ்க்கையிலும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவ முன்வந்துள்ள ராஷ்மிகாவின் இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.
