நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘ராமாயணா’ முதல் பாகத்தை வெளியீட்டு நாளான நவம்பர் 5-ம் தேதி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்காகத் திரையிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சிறப்புக் காட்சி நடைபெற்றால், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாசார மையத்திலும் சிறப்புக் காட்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
