கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதே கூட்டணியில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படம் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் செல்லா அய்யாவு, நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால், “எனக்கு தனிப்பட்ட முறையில் பல படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. ‘இன்று நேற்று நாளை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘எஃப்.ஐ.ஆர்’ போன்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்க முடியாமல் போனது. அதனால் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒரு இரண்டாம் பாக திரைப்படமாவது உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநரிடம் பேசினேன். அதன்பிறகு அரை மணி நேரம் விவாதித்த பிறகே இந்தக் கதையை உருவாக்க முடிவு செய்தோம்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “முதல் பாகத்தை விட எந்த வகையிலும் குறைவாக இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். முதல் பாகத்தில் இருந்த நகைச்சுவை, கலாட்டா, உணர்ச்சி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளன. இந்த திரைப்படத்தில் நான் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்த மாதிரியான ஆண்களை சமூகம் எவ்வாறு பார்க்கிறது என்பதையும் இந்த திரைப்படம் பேசுகிறது. என் தந்தை மாடுகளை மேய்த்துக்கொண்டு படித்து ஐ.பி.எஸ் அதிகாரியாக உயர்ந்தவர். என் சகோதரி ஒரு பெரிய வங்கியில் பணியாற்றுகிறார். எங்கள் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அதேபோல் என் மனைவி விளையாட்டுத் துறையில் இருக்கிறார். அவருக்கு ஆதரவாக இருக்கும் ஒரு கணவரின் கதாபாத்திரத்தைத்தான் இந்த திரைப்படத்தில் நான் ஏற்றுள்ளேன். அவர் இந்திய அளவில் சாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். முதலில் இந்த திரைப்படத்தை மே 28-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் சில காரணங்களால் தாமதமாகி தற்போது ஜூலை 3-ஆம் தேதி வெளியாக உள்ளது” என்று கூறினார்.
—
