கடந்த சனிக்கிழமை மும்பையில் நடைபெற்ற உலக அமைதி விருதுகள் விழாவில் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர். அங்கு உரையாற்றிய அவர், வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நடிகர்கள் பொமன் இரானி, விக்ராந்த் மாஸ்ஸே ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட ஷாருக்கான், 26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒருவரைக் கௌரவித்தார். தனது மகனுடனான உரையாடலை நினைவுகூர்ந்த அவர், வெறுப்புக்குப் பதிலாக அன்பையும், பயத்திற்குப் பதிலாக நம்பிக்கையையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். அமைதி என்பது ஒருவர் எடுக்கும் முடிவு என்றும், அது தனிமனிதரிடமிருந்தே தொடங்குகிறது என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதியாக அமைதி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மற்றவர்களின் பார்வையைப் புரிந்துகொள்வது அவசியம் என்ற ஷாருக்கான், அனைவரின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை; ஆனால் ஒவ்வொருவரின் கதையையும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்றார். மக்கள் தங்களின் கனவுகள், அடையாளங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகப் போராடுகின்றனர். சில நேரங்களில் வாகன நிறுத்தம் போன்ற சிறிய விஷயங்களுக்காகவும் சண்டையிடுகின்றனர். ஆனால் அமைதிக்கு எந்தச் சண்டையும் தேவையில்லை என்று கூறினார்.
உலகப் பயணங்களின்போது தனக்குக் கிடைத்த அன்பை நினைவுகூர்ந்த ஷாருக்கான், அமைதி, நல்லிணக்கம், நல்லெண்ணம் ஆகியவற்றுக்கு இந்தியா சிறந்த எடுத்துக்காட்டு என்றார். ‘தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படத்தின் தனது பிரபலமான வசனத்தையும் நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், பெரிய நாடுகளில் சிறிய சம்பவங்கள் நடப்பது இயல்புதான் என்றார். இருப்பினும், சக்திவாய்ந்த நாடுகளின் முக்கிய முடிவுகளுக்கு மத்தியில் மனிதநேயத்தின் சிறிய செயல்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும், அவையே வரலாற்றை மாற்றும் என்றும் தெரிவித்தார்.
