மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நஸ்ரியா, தமிழில் ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பிறகு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவரது ‘சூட்சும தர்ஷினி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து புதிய தமிழ் படத்திலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் நஸ்ரியா பகிர்ந்த பதிவு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “சிவப்பு கொடியை நோக்கி ஓடும் காளைகளுக்கு பைத்தியம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நானும் அதே நிலையில் இருக்கிறேன்” என அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வெளியானதும், அவருக்கும் அவரது கணவர் பஹத் பாசிலுக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பி, தங்களது கவலையையும் வெளிப்படுத்தினர்.
ஆனால், சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, நஸ்ரியா தற்போது ‘எல் கிளாசிகோ’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்பெயின் நாட்டின் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் காளைச் சண்டை மற்றும் கால்பந்து தொடர்பான அம்சங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. அதனுடன் தொடர்புபடுத்தியே அவர் அந்த பதிவை பகிர்ந்திருக்கலாம் என்றும், இது படத்தின் விளம்பர உத்தியாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
