நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், அதனைத் தொடர்ந்து ‘இண்டிபெண்டன்ட்’ என்ற புதிய திரைப்படத்தை புதுமுக நடிகர்களை மையமாக வைத்து இயக்கியுள்ளார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். கதைக்களம் மற்றும் உருவாக்கத்தில் தனித்துவம் கொண்ட இந்த படம் தற்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தனது அடுத்த படைப்பாக நடிகர் அதர்வாவை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க தயாராகியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தில் நடித்திருந்த கன்னட நடிகர் உபேந்திரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் உபேந்திரா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அல்லது முக்கிய குணச்சித்திர வேடத்தில் தோன்றுகிறாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அதிரடி கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
