தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராகவும், தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகவும் செயல்பட்டு வரும் பவன் கல்யாண், தனது இளமைப் பருவ வாழ்க்கையில் நடந்த முக்கியமான அனுபவம் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அண்மையில் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “எனக்கு 17 வயதாக இருந்தபோது நக்சலைட் இயக்கத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது. ஒரு கட்டத்தில் துப்பாக்கியை கையில் எடுக்க வேண்டும் என்ற எண்ணமும் என்னுள் தோன்றியது. அப்போது எனக்குள் இருந்த கோபமும், சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிரான உணர்வும் தான் அந்த சிந்தனையை உருவாக்கியது. நக்சலைட் இயக்கத்தில் இணைய வேண்டும் என்ற விருப்பம் 17 வயது முதல் 21 வயது வரை என்னுள் தொடர்ந்து இருந்தது. அந்த காலகட்டத்தில் நான் ஒரு விதமான மனக்குழப்பத்திலும் தீவிரமான சிந்தனைகளிலும் இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “அந்த சமயத்தில் என் அண்ணன் சிரஞ்சீவி என்னிடம், ‘உனக்கு இந்த அளவுக்கு கோபம் எங்கிருந்து வருகிறது?’ என்று கேட்டார். அதற்கு நான், சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக பேச வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம் என்று கூறினேன். நான் கூறியதை கேட்ட பிறகு அவர் மிகவும் கவலைப்பட்டார். பின்னர், ‘நீ சிரஞ்சீவியின் தம்பியாக இல்லாமல், குடும்பத்தின் முழுப் பொறுப்பும் உன் தோள்களில் இருந்திருந்தால், உன் வருமானத்தையும் உழைப்பையும் நம்பி குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தால், இதே முடிவை எடுத்திருப்பாயா?’ என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. நான் அமைதியாக இருந்தேன். உண்மையில் அவரது அந்த ஒரு கேள்விதான் எனது சிந்தனையையும் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையையும் மாற்றியது” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
—
