நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இருந்து வந்தது. பல ஆண்டுகளாக அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களுக்கு, 2020ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் அரசியல் களத்தில் ரஜினிகாந்தின் புதிய பயணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல காரணங்களால் அவர் தனது அரசியல் முடிவிலிருந்து பின்வாங்கினார்.
அதன்பிறகு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த சூழலில் பேசிய ரஜினிகாந்த், “நான் 2021ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்திருந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்பேன்” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது இந்த கருத்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் ஒரு மிகப்பெரிய தலைவர். 2021ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய தவறவிட்ட வாய்ப்பாக நான் கருதுகிறேன். அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதற்காக மட்டுமல்ல, அவர் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது. ஏனெனில் அவரிடம் பல திட்டங்களும், ஏராளமான கனவுகளும் இருந்தன. ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகள் காரணமாக அந்த முடிவை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவருக்கு தெளிவான பார்வையும் திட்டங்களும் இருந்தன. சிங்கப்பூரின் முன்னாள் தலைவர் லீ குவான் யூ செய்ததைப் போல பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் நினைத்திருந்தார். அவரது தொலைநோக்கு சிந்தனையை நான் நன்கு அறிவேன். நாம் ஒரு மிகப்பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம், தமிழகம் ஒரு பெரிய தலைவரை இழந்துவிட்டது என்று நான் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
