தமிழ் திரையுலகில் ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பின்னர் ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’, ‘தெறி’, ‘காளி’, ‘குபேரா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
சுனைனாவுக்கும் துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபரான கலித் அல் அமெரிக்கும் இடையே ஏற்கனவே திருமண நிச்சயம் நடைபெற்றதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த தகவல் தொடர்பாக இருவரும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த சூழலில், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இருவரும் தங்களது சமூக வலைதள கணக்குகளில் பகிர்ந்திருந்த ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. யூடியூப் தளத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ள கலித் அல் அமெரி, சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், இவர்களின் திடீர் பிரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சினிமா துறையைச் சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் நடிகைகளின் காதல் மற்றும் திருமண வாழ்க்கைகள் குறுகிய காலத்திலேயே பிரிவில் முடிவடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதேபோல் சுனைனாவின் காதல் உறவும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
