பாரதிராஜா ஐயாவுடன் பணியாற்றிய நினைவுகளை நான் என்றும் போற்றிப் பாதுகாப்பேன்… – நடிகர் சிம்பு!

1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தார். கிராமிய வாழ்க்கையின் நுணுக்கங்களையும், மண்ணின் மணத்தையும் திரையில் உணர்வுபூர்வமாக பதிவு செய்த அவர், தொடர்ந்து பல வெற்றிப் படைப்புகளை வழங்கி “இயக்குநர் இமயம்” என்ற பெருமைக்குரிய பட்டத்தைப் பெற்றார். தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியின் மூலம் தமிழ் சினிமாவில் அழியாத அடையாளத்தை உருவாக்கியவர் பாரதிராஜா.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, சென்னை நகரில் உள்ள தனது இல்லத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து திரையுலகினரும் ரசிகர்களும் தொடர்ந்து கவலை தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு செய்தி வெளியானதும் தமிழ் திரையுலகம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது.

பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதிராஜா ஐயாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு மனம் நொறுங்கிப் போனேன். அவருடன் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அந்த நினைவுகளை நான் என்றும் போற்றிப் பாதுகாப்பேன். அவரது அன்பு, எளிமை மற்றும் சினிமா மீதான அளவற்ற ஆர்வம் அவரைச் சுற்றியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பதிவில், “தனது அபாரமான கதை சொல்லும் திறன் மூலம் பல தலைமுறைகளுக்கு அவர் உத்வேகம் அளித்தார். எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்றும் நிலைத்திருக்கும். அவரது படைப்புகள் வழியாக அவரது மரபு தொடர்ந்து வாழும். இந்த மாபெரும் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் அவரை நேசிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சிம்பு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading