தமிழ் திரைப்பட உலகில் கிராமிய கதைகளுக்கு புதிய அடையாளத்தை வழங்கி, மண்ணின் மணத்தை திரையில் உணர்வுபூர்வமாக பதிவு செய்த இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி வெளியானதும் திரையுலகம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கும் திரையுலகினரும் பொதுமக்களும் தொடர்ந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை சுஹாசினி, பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தனது இரங்கலை வெளிப்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், “பாரதிராஜா போன்ற ஒருவர் மீண்டும் உருவாக முடியாது. தமிழ் சினிமாவின் நிறத்தையும் குணத்தையும் மாற்றிய பெருமை அவருக்கே சேரும். எதார்த்தமான வாழ்க்கையையும், சாதாரண மக்களின் உணர்வுகளையும் உண்மையான வடிவில் ரசிகர்களுக்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா. அவர் இல்லாமல் தமிழ் சினிமாவில் எதார்த்தம் என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லை” என்று உருக்கமாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “என்னை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்தியவரும் பாரதிராஜாதான். அவர் ஒரு இயக்குநர் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தார். என் கணவருக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர். அவரது ஆலோசனைகளும், அனுபவங்களும் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்று அவர் நம்மிடையே இல்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது” என்று கண்கலங்கியபடி கூறினார்.
அத்துடன், “தமிழ் சினிமாவுக்கு அவர் வழங்கிய பங்களிப்புகள் அளவிட முடியாதவை. பல தலைமுறைகள் அவருடைய படைப்புகளை பார்த்து கற்றுக்கொள்ளும். அவர் உருவாக்கிய திரைப்படங்களும், அவர் விட்டுச் சென்ற கலை மரபும் என்றும் நிலைத்திருக்கும்” என்றும் சுஹாசினி உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.
—
