பார்வையாளர்களின் யூகத்திற்கு ஏற்ப வித்தியாசமான கிளைமாக்ஸ்-ஐ வைத்த ‘மூன்றாம் கண்’ பட இயக்குனர்!

‘மூன்றாம் கண்’ பட இயக்குனர்!

ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹோர்ஸ் ஸ்டூடியோ நிறுவனங்களின் சார்பில் கே. சசிகுமார் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘மூன்றாம் கண்’. இந்த படத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி மற்றும் ராதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படம் குறித்து இயக்குநர் சகோ கணேசன் கூறுகையில், “ஒரு சிறிய சம்பவம் கூட மிகப்பெரிய மாற்றங்களுக்கு காரணமாக அமையும்” என்ற கேயாஸ் தியரியை அடிப்படையாகக் கொண்டு, ஒன்றோடொன்று தொடர்புடைய நான்கு கதைகளை ஹைபர்லிங்க் முறையில் இணைத்து இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ராஷோமான் எபெக்ட் என்ற சுவாரஸ்யமான கதை சொல்லும் உத்தியும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொலை மர்மம் மற்றும் குற்றப் பின்னணியை மையமாகக் கொண்ட இந்த கிரைம் திரில்லர் திரைப்படம், வித்தியாசமான மற்றும் வணிக ரீதியாக ஈர்க்கக்கூடிய திரைக்கதையுடன் உருவாகியுள்ளது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழ் சினிமாவில் ‘விருமாண்டி’, ‘விண்டேஜ் பாயிண்ட்’ போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட ராஷோமான் எபெக்ட் என்ற திரைக்கதை நுட்பத்தை இந்த படத்திலும் பயன்படுத்தியுள்ளோம். இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையின் மீது நம்பிக்கை வைத்தே இதில் நடித்த அனைத்து நடிகர்களும் உடனடியாக ஒப்புக்கொண்டு இணைந்தனர்” என்று தெரிவித்தார்.

படத்தின் கதைக்களம் குறித்து விளக்கிய அவர், “ஒரு மூடப்பட்ட தொழிற்சாலைக்குள் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். வெவ்வேறு காரணங்களுக்காக அந்த தொழிற்சாலைக்குள் நான்கு பேர் நுழைகிறார்கள். அங்கு நடந்த சம்பவங்களால் நால்வருமே தாங்கள்தான் அந்த நபரை கொலை செய்திருக்கக் கூடும் என்ற அச்சத்துடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த கொலையை செய்தது அவர்களில் யாருமே அல்ல. அப்படியானால் அந்த ஐந்தாவது நபர் யார் என்பது தான் படத்தின் முக்கியமான மர்மம். இதனை பார்வையாளர்கள் தங்களது யூகங்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கும் வகையில் கதை கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை படத்துடன் நேரடியாக இணைக்கும் முயற்சியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading