புராண வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பகவான்’. மித்தாலஜிக்கல் திரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் சு. காளிங்கன் இயக்கியுள்ளார். அம்மன்யா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரித்துள்ள இப்படத்தில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், யோக் ஜேபி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு பாடல்களுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளதுடன், பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் காளிங்கன் கூறுகையில், “இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. நாம் அனைவரும் பகவானை வணங்குகிறோம். ஆனால் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் அந்த சக்தி யார்? அவர் ஒரு உருவமா? அல்லது அதற்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தியா? அப்படியானால் இல்லுமினாட்டி என்றால் என்ன? போன்ற பல கேள்விகளுக்கான பதில்களே இந்த திரைப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சாதாரணமான கதைக்களமாக இல்லாமல், பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், நாம் அறிந்த மகாபாரதக் கதையின் ஒரு முக்கிய பகுதியும் இந்த திரைப்படத்தில் இடம்பெறுகிறது. ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல அம்சங்கள் இதில் காத்திருக்கின்றன. குறிப்பாக நாம் அன்றாடம் பெரிதாக கவனிக்காமல் கடந்து செல்லும் ஒரு சாதாரண உயிரினமான பல்லி, இந்த கதையில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆரி அர்ஜுனன் நடித்துள்ள ‘பகவான்’ திரைப்படத்தின் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
—
