தளபதி பட வாய்ப்பு மிஸ் ஆனது ஏன்? சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த நடிகர் ஜெயராம்!

1991-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இந்த திரைப்படம், கதைக்களம், நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமி, தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பின்னர் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தனக்குத்தான் என்று நடிகர் ஜெயராம் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தளபதி திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் என்னைத் தான் அணுகினர். அந்த கதாபாத்திரம் குறித்து நடிகர் மம்முட்டிதான் என்னிடம் கூறியதுடன், இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சந்திக்குமாறும் அறிவுறுத்தினார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் என்னை சந்தித்தபோது, இந்த படத்திற்காக தொடர்ந்து மூன்று மாத கால்ஷீட்டை முழுமையாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டார். ஏனெனில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி ஆகிய இருவருடனும் பல முக்கியமான காட்சிகளில் நான் நடிக்க வேண்டியிருக்கும் என்று அவர் விளக்கினார். அந்த கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானதாக இருந்ததால், தொடர்ந்து நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது” என்றார்.

அந்த காலகட்டத்தில் மலையாள திரையுலகில் மிகவும் பிஸியான நடிகராக இருந்த ஜெயராம், ஏற்கனவே பல திரைப்படங்களுக்கு தேதிகளை ஒதுக்கியிருந்ததால், ‘தளபதி’ திரைப்படத்திற்கு தேவையான கால்ஷீட்டை வழங்க முடியாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். “அந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் போனது இன்று வரை எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது” என்று ஜெயராம் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading