கடந்த 2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ஒன்றாக திரையுலகில் அறிமுகமானவர்கள் நடிகைகள் சாய் பல்லவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், அதில் நடித்த இருவருக்கும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கித் தந்தது. பின்னர் இருவரும் தமிழிலும் அறிமுகமாகி, தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகைகளாக தங்களுக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் அனுபமா பரமேஸ்வரன், தனக்குள் மறைந்து கிடந்த ஒரு திறமையை வெளிக்கொண்டு வந்து ஊக்கப்படுத்தியவர் சாய் பல்லவி என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தனது சிறுவயது விருப்பங்கள் மற்றும் கலை ஆர்வம் குறித்து பகிர்ந்த அவர், சாய் பல்லவியுடன் கொண்டுள்ள நட்பையும் அந்த பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அனுபமா கூறுகையில், “எனக்கு சிறுவயதிலிருந்தே வண்ணங்கள் மீது மிகுந்த ஈர்ப்பு இருந்தது. இருப்பினும் ஓவியம் வரைவதை நான் ஒருபோதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது சாய் பல்லவி தனது வாட்டர் கலர் பெட்டியை என்னிடம் கொடுத்தார். அந்த ஒரு எளிமையான செயல் தான் எனது புதிய பயணத்திற்கான தொடக்கமாக அமைந்தது. எனக்குள் இப்படி ஒரு திறமை இருப்பதை நானே உணராத நேரத்தில் அதை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக சாய் பல்லவிக்கு என் அன்பும் நன்றிகளும். லவ் யூ டார்லிங்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு பதிலளித்த சாய் பல்லவி, “என்னுடைய அன்பான பேபி, உன்னுடைய ஓவியங்கள் மிகவும் தனித்துவமானவை. அவை மிகவும் அழகாக இருக்கின்றன. உன்னுடைய திறமைகள் நாளுக்கு நாள் வளர்வதை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பாராட்டியுள்ளார். ஒரே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இரண்டு நடிகைகள், எந்தவித போட்டி மனப்பான்மையும் இல்லாமல் இன்றளவும் அன்புடனும் நட்புடனும் இருந்து வருவது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதனை பாராட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
