நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டியூட்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சி உருவாகுமா என்ற கேள்வி நீண்ட நாட்களாக ரசிகர்களிடையே இருந்து வந்தது.
பிரபல இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான ‘டியூட்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ரோகினி, நேகா ஷெட்டி மற்றும் பரிதாபங்கள் ராகுல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதுடன், ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இளம் தலைமுறை ரசிகர்களிடையே குறிப்பாக பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், பிரதீப் ரங்கநாதனின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் கீர்த்தீஸ்வரனிடம் ‘டியூட்-2’ திரைப்படம் உருவாகுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “டியூட்-2 குறித்து பிரதீப் ரங்கநாதனிடம் ஏற்கனவே பேசியுள்ளேன். இரண்டாம் பாகம் உருவானால், அது முதல் பாகத்தின் நேரடி தொடர்ச்சியாக இருக்கலாம் அல்லது அதே கதையுலகை அடிப்படையாகக் கொண்டு புதிய கதைக்களத்தில் உருவாகலாம்” என்று தெரிவித்தார். இந்த தகவல் வெளியானதையடுத்து, ‘டியூட்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
—
