ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான பவன் கல்யாண், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனக்குத் தூக்கம் வராத இரவுகளில் மனதை அமைதிப்படுத்த அவர் பின்பற்றும் ஒரு சுவாரஸ்யமான பழக்கத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் நகைச்சுவையாக அளித்த இந்தப் பதில் இடம்பெற்ற காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த நேர்காணலில் பவன் கல்யாண் கூறுகையில், “எனக்கு பேய்ப் படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அவை நம்மை கதையுடன் முழுமையாக ஒன்றிணைந்து பார்க்க வைக்கின்றன. அதனால் வேறு எதையும் சிந்திக்க முடியாது. என் மனதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தி விடும். இல்லையெனில் என் மனம் பல விஷயங்களை நினைத்து அலைந்து கொண்டிருக்கும்.
எனக்குத் தூக்கம் வராத நேரங்களில் நான் ஒரு ஹாரர் திரைப்படத்தைப் பார்ப்பேன். அதை பார்த்தவுடன் என் மனம் அமைதியாகி விடும்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பேட்டியில் ‘துரந்தர்’ திரைப்படத்தைப் பாராட்டிய அவர், “துரந்தர் படத்தின் முதல் பாகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் இரண்டாம் பாகத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. இருந்தாலும், அந்தப் படத்தை உருவாக்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
—
