ஹிந்தி திரையுலகில் அக்ஷய் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘வெல்கம் டு தி ஜங்கிள்’. இந்தப் படத்தில் அவருடன் நடிகைகள் ரவீணா டாண்டன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.குறிப்பாக 90-களில் ‘மொஹ்ரா’, ‘கிலாடியோன் கி கிலாடி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து ஜோடியாக நடித்த அக்ஷய் குமார் – ரவீணா டாண்டன் கூட்டணி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ஒன்றாக நடித்துள்ளது. வருகிற ஜூன் 26-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் புரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றில் நடிகர் அக்ஷய் குமார், ரவீணா டாண்டன் குறித்து பேசுகையில், “ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, சூரியன் மறைவதற்கு முன்பாக சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தோம். எங்களிடம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் ரவீணா டாண்டன் ஆடை மாற்றுவதற்காக மிகவும் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கேரவனுக்கு சென்று வந்தால், அந்தக் காட்சியை படமாக்க முடியாத சூழல் உருவாகியிருக்கும்.
அந்த நேரத்தில் எந்த தயக்கமும் இல்லாமல், படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஜெனரேட்டர் வேனுக்குள் சென்று ஆடை மாற்றிக்கொண்டு வந்து அந்தக் காட்சியில் நடித்தார். சினிமா மீதான அர்ப்பணிப்பு உணர்வும், தயாரிப்பாளர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணமும் அவரிடம் அப்போது இருந்தது போலவே இன்றும் இருக்கிறது” என்று பாராட்டியுள்ளார்.
