எல்ரெட் குமார் தயாரிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மண்டாடி’. இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மீனவர் சமூக மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் பண்பாடு மற்றும் வாழ்வாதார போராட்டங்களையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதனுடன் கட்டுமரப் படகு போட்டியை பின்னணியாகக் கொண்ட வலுவான கதைக்களமும் இணைக்கப்பட்டுள்ளதால், படம் தனித்துவமான திரைக்கதை அமைப்புடன் உருவாகியுள்ளது.
பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்பு அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படக்குழுவினர் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் படப்பிடிப்பை மேற்கொண்டு, மீனவர் சமூகத்தின் வாழ்க்கை முறையை இயல்பாக பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த திரைப்படம் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தற்போது ‘மண்டாடி’ திரைப்படத்தின் பின்னணி பணிகள் மற்றும் இதர தொழில்நுட்ப பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தை வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
