மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகிலுள்ள காட்ரோட்டில் அமைந்துள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில் “இயக்குநர் இமயம்” என்று போற்றப்பட்ட பாரதிராஜா, தனது தனித்துவமான கலைப்பயணத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்தவர். அவரது இறுதி நிகழ்வில் திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தேனி மாவட்டத்தில் பிறந்த பாரதிராஜா, சினிமா மீதான தீவிர ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து பல்வேறு வேலைகளை செய்து வாழ்க்கையை முன்னெடுத்தார். பல போராட்டங்களையும் சவால்களையும் கடந்து இறுதியில் ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் வாய்ப்பைப் பெற்று இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கிய அவர், ஸ்டூடியோவுக்குள் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த திரைப்படங்களை இயற்கையின் மடியில் கொண்டு சென்று புதிய சினிமா மொழியை உருவாக்கியவர் என்ற பெருமையை பெற்றார்.
கிராம வாழ்க்கையின் எதார்த்தத்தையும், மண்ணோடு கலந்த மனித உறவுகளின் ஆழத்தையும் மிக இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் திரையில் பதிவு செய்தவர் பாரதிராஜா. மாறுபட்ட சிந்தனை, புதுமையான கதை சொல்லும் பாணி மற்றும் சமூக அக்கறை கொண்ட படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், பல திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு சில திரைப்படங்களை தயாரித்தும் திரைத்துறையில் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தபடி, துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் வன்னியரசு ஆகியோர் பங்கேற்றனர். பாரதிராஜாவின் மகள் ஜனனி மற்றும் அவரது சகோதரர் ஜெயராஜ் ஆகியோர் இறுதிச்சடங்குகளை மேற்கொண்டனர். குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கண்ணீருடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
‘16 வயதினிலே’, ‘மண்வாசனை’, ‘காதல் ஓவியம்’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு வழங்கிய பாரதிராஜா, தனது 84-வது வயதில் இந்த உலகிற்கு விடை கொடுத்துள்ளார். “என் இனிய தமிழ் மக்களே” என்று உருக்கமாக உரையாற்றிய அவரது குரல் இனி நேரில் கேட்க முடியாவிட்டாலும், அவர் உருவாக்கிய திரைப்படங்கள் மற்றும் கலைப் பாரம்பரியம் காலம் கடந்தும் ரசிகர்களின் மனங்களில் ஒளியாக வாழ்ந்து கொண்டே இருக்கும்.
