உன்னை பிடிக்கும்…. உன் நடிப்பை பிடிக்காது என்பார்… இயக்குனர் பாரதிராஜா குறித்து உருக்கமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா இன்று காலமானார். அவருக்கு 84 வயதாகும். அவரது உடல், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குநராக பாரதிராஜா அறிமுகமான திரைப்படம் ‘16 வயதினிலே’. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு முன்னணி நடிகர்களையும் ஒன்றாக நடிக்க வைத்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘ஒரு கைதியின் டைரி’ உள்ளிட்ட திரைப்படங்களையும், ரஜினிகாந்தை வைத்து ‘கொடி பறக்குது’ திரைப்படத்தையும் இயக்கினார். தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளை வழங்கிய பாரதிராஜாவின் மறைவு திரையுலகினருக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “பாரதிராஜாவின் திறமையும் சாதனைகளும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். தமிழ் திரையுலகில் பல புதிய தொழில்நுட்பங்களையும் புதுமையான அணுகுமுறைகளையும் கொண்டு வந்தவர் அவர். ஏராளமான திறமையாளர்களை அறிமுகப்படுத்தி, திரையுலகின் வளர்ச்சிக்காக மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் என யாருக்கு எந்தவிதமான பிரச்சினை ஏற்பட்டாலும், முதலில் குரல் கொடுத்து அவர்களுக்காக போராடியவர் பாரதிராஜா. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவரது பெயர் மறக்கப்படாது. அவர் என்றென்றும் தமிழ் சினிமா வரலாற்றில் நிலைத்திருப்பார்” என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “தனிப்பட்ட வாழ்க்கையில் பாரதிராஜா ஒரு குழந்தையைப் போன்ற மனம் கொண்டவர். பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்றும், பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்றும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர். ‘உன்னை எனக்குப் பிடிக்கும், ஆனால் உன் நடிப்பு எனக்குப் பிடிக்காது’ என்று என்னை நேரடியாக விமர்சனம் செய்வார். அவருடன் இருந்தாலே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். அவரைப் போல வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசக்கூடியவர்கள் அரிது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, சிவாஜி கணேசன் என அனைவருடனும் அன்புடனும் நட்புடனும் பழகியவர். அவர் உடல்நலம்பெற்று மீண்டு வருவார் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவர் எப்போதும் நம் நினைவுகளில் வாழ்வார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று உருக்கமாக தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading