இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், நடிகர் மகேஷ் பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘வாரணாசி’. இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
இந்த திரைப்படத்தின் கதைக்களத்தில் ராமாயணக் கூறுகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய திரையுலக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல பிரம்மாண்டமான காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் செலவில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், அதன் மிகப்பெரிய பட்ஜெட்டை கருத்தில் கொண்டு டிஜிட்டல் உரிமை தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக ஹைதராபாத்தில் உள்ள நெட்பிளிக்ஸ் அலுவலகத்தை ராஜமவுலி அணுகியதாகவும், இறுதி முடிவை அமெரிக்காவில் உள்ள நிர்வாகத்தினரே எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் அமெரிக்காவில் நெட்பிளிக்ஸ் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
