சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் குறித்து பேசிய விஜய் ஆண்டனி, தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதும், ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் நடிகராக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதும் சசி தான் என்று தெரிவித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் சசியின் கதை சொல்லும் முறை எப்போதும் புதுமையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தாய்மையை கொண்டாடிய நிலையில், ‘நூறு சாமி’ திரைப்படம் பெண்களின் இன்னொரு வாழ்க்கையையும் அவர்களின் உணர்வுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இதில் ஸ்வாசிகா தாயாகவும், தனது மருமகன் அஜய் திஷன் மகனாகவும் நடித்திருப்பதாகவும், தாம் குறைந்த நேரமே திரையில் வந்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளியாக நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், திரைப்படங்களில் சம்பளத்திற்கு பதிலாக லாபத்தில் பங்கு வாங்கும் முறையை முதலில் தாம் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறிய அவர், அரசியலில் இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் பொள்ளாச்சி போன்ற அமைதியான கிராமப்புற பகுதியில் குடியேற திட்டமிட்டிருப்பதாகவும், நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கை மன அமைதியை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
