‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘வேட்டுவம்’, ‘அனந்தன் காடு’ மற்றும் தனது 40வது திரைப்படம் ஆகிய மூன்று படங்களில் நடிகர் ஆர்யா நடித்து வருகிறார். அவற்றில் ஆர்யாவின் 40வது படத்தை இயக்குநர் நிகில் முரளி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகை வைஷ்ணவி சைதன்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஆர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனுடன், சிரிப்பும் அன்பும் நிறைந்த படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்றும், படப்பிடிப்பு முடிந்தாலும் அந்த இனிய நினைவுகளும் புன்னகைகளும் என்றும் நிலைத்திருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து நடிகை நிகிலா விமலும் தனது சமூக வலைதளப் பதிவில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது வீட்டிற்கு திரும்பிவிட்டதாகவும், விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆர்யாவின் 40வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தை ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகியோர் இணைந்து தங்களது ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர். இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
