பாலிவுட் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், அரசியலிலும் சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பாரத் பாக்ய விதாதா’. இந்த படம் ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது, காமா மருத்துவமனை ஊழியர்கள் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் கங்கனா ரணாவத் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் குறித்து பேசிய கங்கனா, மருத்துவத் துறையில் செவிலியர்கள் மிக முக்கிய பங்காற்றினாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பயன்படுத்தப்படும் செவிலியர் சீருடைகள் இன்னும் ஆங்கிலேயர் காலத்தின் தாக்கத்துடன் இருப்பதாகவும், இந்திய காலநிலைக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அவற்றை இந்தியமயமாக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். செவிலியர்களின் வசதி மற்றும் விருப்பங்களை கருத்தில் கொண்டு சீருடை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை என அவர் கூறியுள்ளார்.
