அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ள ‘பாதயாத்ரா’ திரைப்படம் 31-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளது. கலைப்படங்கள் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவரது ‘அனந்தரம்’, ‘மதிலுகள்’, ‘விதேயன்’ உள்ளிட்ட படங்களில் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்ற அடூர், கடைசியாக 2016-ம் ஆண்டு ‘பின்னேயும்’ என்ற மலையாளப் படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டியுடன் மீண்டும் இணைந்து ‘பாதயாத்ரா’ படத்தை உருவாக்கியுள்ளார். மம்மூட்டியே தயாரித்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் 31-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியிருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற அடூர் கோபாலகிருஷ்ணனின் படைப்பாக இருப்பதால், ‘பாதயாத்ரா’வும் திரைப்பட விழாவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
