‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் 2019-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளினி ரவி. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இப்படத்தைத் தொடர்ந்து, சுசீந்திரன் இயக்கிய ‘சாம்பியன்’ படத்தில் நடித்தார்.
தமிழில் ஆர்யா, விஷால் இணைந்து நடித்த ‘எனிமி’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘ஜாங்கோ’ ஆகிய படங்களில் இடம்பெற்றார். விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் நடித்திருந்தார். பின்னர் தெலுங்குப் படங்களிலும் கவனம் செலுத்தினார். விஜய் ஆண்டனி நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியான ‘ரோமியோ’ திரைப்படமே மிருணாளினி நடிப்பில் கடைசியாக வெளியான படமாகும். அதன்பிறகு அவரது நடிப்பில் வேறு படங்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவைத் தனது காதலராக அறிமுகப்படுத்தி மிருணாளினி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களும் இணையத்தில் பரவின. இந்நிலையில், மலேசியாவின் லங்காவி தீவில் இந்து முறைப்படி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை மிருணாளினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
