சொல்லாமலே’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ உள்ளிட்ட வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இயக்குநர் சசி, தற்போது விஜய் ஆண்டனி மற்றும் சுவாசிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, “அன்பாக இருப்பவர்களை மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை மிதிக்கும் சமூகத்தை மையமாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன். குறிப்பாக ஒற்றை பெற்றோராக வாழும் தாய்மார்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் வலிகளையும் இந்த படத்தில் உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளோம். நமக்காக கண்ணீர் சிந்தும் தாயிடம் கூட பல மகன்கள் புரிதலின்றி கேள்வி கேட்பார்கள். அந்த மனநிலையை மாற்றும் முயற்சியாகவும் இந்த படம் இருக்கும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எதார்த்தமான கதைகளை மட்டுமே இயக்குகிறேன் என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் புதிய கதையை புதுமையாக சொல்ல முடிந்தால் அதுவே உண்மையான கமர்ஷியல் சினிமா என்று நான் நம்புகிறேன். ஒரு கதையை விறுவிறுப்பாகவும் உணர்ச்சிகரமாகவும் சொல்ல முடிந்தால் அது ரசிகர்களை சென்றடையும். நெகிழ்வூட்டும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் என் படங்களிலும் அந்த தன்மை இருக்கும். இந்த படத்தை பார்த்த பிறகு ஒற்றை பெற்றோர்கள் தங்களை பெருமையுடன் பார்க்கத் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். ஹீரோயிசத்தை மையமாகக் கொண்ட கதைகளை என்னிடம் இல்லை, மனித உணர்வுகளே என் படங்களின் மையம்” என்று தெரிவித்துள்ளார்.
