‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘வாரணாசி’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். ராஜமவுலியின் தந்தையும் பிரபல கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.
சமீபத்தில் ரசிகர்களுடனான கலந்துரையாடலில் படத்தின் கதைக்களம் குறித்து பேசிய விஜயேந்திர பிரசாத், “ராமர் மற்றும் கும்பகர்ணன் இடையேயான மோதலை மையமாகக் கொண்டதே இந்தப் படத்தின் அடிப்படை கரு. படத்தின் அறிமுக டிரைலரிலேயே ராமர், கும்பகர்ணன் மற்றும் ஹனுமான் ஆகிய கதாபாத்திரங்களின் சாயலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு மேல் கதையைப் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது” என்று தெரிவித்தார்.
புராணக் கதைகள், அறிவியல் கற்பனை, பேண்டஸி மற்றும் வரலாற்று அம்சங்கள் ஆகியவற்றை இணைத்து உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமாக ‘வாரணாசி’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
