இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் தீஷன், காவ்யா அனில் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நூறுசாமி’ திரைப்படம் ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து தான் இயக்கிய படம் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் பேசியதை கேட்டபோது என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. அதிலிருந்துதான் இந்தக் கதையின் கரு உருவானது. ‘பிச்சைக்காரன்’ படத்தில் தாயை தெய்வமாக காட்டியிருந்தோம். ஆனால் இந்தப் படத்தில் தாயை ஒரு மனிதராக பார்க்கிறோம். அவர்களுக்கும் தனிப்பட்ட உணர்வுகள், ஆசைகள் மற்றும் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த படம் பேசுகிறது. இந்தப் படத்தைப் பார்க்கும் பலர் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை நினைத்து பார்க்கத் தொடங்குவார்கள்” என்றார்.
விஜய் ஆண்டனி தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அவர் நடிக்கவில்லை என்றால் அந்தக் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்திருப்பார் என்றும் சசி தெரிவித்தார். மேலும், ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை பார்த்த பிறகு ஸ்வாசிகாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க விரும்பியதாகவும், அவரது நடிப்பு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தரும் என்றும் கூறினார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் சமூகத்தில் சிந்திக்க வைக்கும் கேள்விகளை எழுப்பும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
