கதிர் மற்றும் திவ்ய பாரதி நடித்துள்ள ‘லிங்கம்’ என்ற வெப் தொடர் வரும் 26-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. இந்தத் தொடரை எழுதி இயக்கியுள்ள லக்ஷ்மி சரவணகுமார், ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி எதிர்பாராத சூழ்நிலைகளால் மாற்றமடைகிறது என்பதை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார்.
இந்தக் கதையில் கதாநாயகனாக வரும் கதிர், போலீஸ் துறையில் சேர வேண்டும் என்ற கனவுடன் கபடி விளையாட்டில் ஈடுபடுகிறார். விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் காவல்துறையில் சேர முயற்சிக்கும் அவருக்கு பல தடைகள் உருவாகின்றன. அந்தத் தடைகளுக்கு காரணமான சக்தியை எதிர்கொள்ளும் சூழலில் அவர் தாதாவாக மாற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன்பிறகு அவரது வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களே தொடரின் மையக்கதையாக அமைகிறது.
இந்த வெப் தொடர், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய லிங்கம் என்ற நபரின் வாழ்க்கை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாச்சியார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த லிங்கம் மற்றும் அவரது எதிரி பிரபு ஆகியோருக்கிடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற மோதல்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. 1996-ஆம் ஆண்டு சிறைக்குள் இருந்த லிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
