‘பெத்தி’ படத்தில் ஜான்வி கபூர் காட்சிகளின் மீதான விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் புச்சி பாபு சனா!

புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் பான் இந்தியா அளவில் திரையரங்குகளில் ஓடி வருகிறது. படம் வெளியான பிறகு, கதாநாயகி ஜான்வி கபூரின் கதாபாத்திரத்திற்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல், அவரை கிளாமர் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் புச்சிபாபு சனா தனது எக்ஸ் தளப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஒரு திரைப்பட இயக்குநராக சினிமா என்பது மக்களை மகிழ்விப்பதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பை உருவாக்குவதற்கும் பயன்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். யாரையும் அசௌகரியப்படுத்தவோ அல்லது அவமதிக்கவோ அது காரணமாக இருக்கக் கூடாது. ‘பெத்தி’ திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்து எழுந்த விமர்சனங்களை நாங்கள் கவனமாக எடுத்துக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பெண்களுக்கு திரையிலும், திரைக்கு வெளியிலும் எப்போதும் மரியாதை கொடுத்து வந்துள்ளேன். எந்த பெண் கதாபாத்திரத்தையும் இழிவாகவோ அல்லது பொருளாகவோ சித்தரிக்கும் நோக்கம் எங்களிடம் இருந்ததில்லை. இருப்பினும் சில காட்சிகள் அப்படியான உணர்வை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மனப்பூர்வமாக வருந்துகிறோம். பார்வையாளர்களின் கருத்துகளை மதித்து, சம்பந்தப்பட்ட காட்சிகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் திரையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஜான்வி கபூரை மையமாகக் கொண்ட சில கிளாமர் காட்சிகள் திருத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading