கமல்ஹாசனின் நீண்டகால நெருங்கிய நண்பரும், அவரது பல முக்கியமான திரைப்படங்களை இயக்கியவருமான சிங்கீதம் சீனிவாசராவ், தனது 94-வது வயதிலும் திரைப்பட இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ‘ராஜ பார்வை’, ‘பேசும் படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்கள் இவரது இயக்கத்தில் உருவாகியுள்ளன.
தற்போது அவர் இயக்கியுள்ள தெலுங்குத் திரைப்படமான ‘சிங் கீதம்’ ஜூன் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது. அஹில்யா பம்ரூ, அயான், ஷாலினி கொன்டேபுடி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் குறித்து பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “சிங்கீதம் அவர்களை நான் எப்போதும் ஒரு சாதனையாளராகவே பார்க்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்தக் கதையை என்னிடம் கூறியபோது உடனடியாக அது என்னை கவர்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் சாதாரண வார்த்தைகளால் பேசாமல் பாடல்களின் மூலமாகவே உரையாடும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம் இது. அதனால் ஒவ்வொரு வசனத்தையும் இசை வடிவில் உருவாக்க வேண்டிய சவால் இருந்தது. எனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான இசை அனுபவமாக இந்த படம் அமைந்தது. இதற்காக நான் புதிய இசை அணுகுமுறையை உருவாக்கினேன். சமீபத்தில் கமல்ஹாசன் இந்தப் படத்தை பார்த்து மிகவும் பாராட்டினார். மேலும், ‘இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தில் நானும் பங்கேற்றிருக்க வேண்டும்’ என்று அவர் கூறியதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது” என்று தெரிவித்துள்ளார்.
