இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி பின்னர் நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட பல படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
‘பிச்சைக்காரன்’ வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி – சசி கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ‘நூறு சாமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடலை நினைவூட்டும் வகையில் இந்த தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
முதலில் மே 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘நூறு சாமி’ திரைப்படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, படம் ஜூன் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘பிச்சைக்காரன்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
