நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது அவர் நடித்துள்ள புதிய படமான ‘அனந்தன் காடு’ ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ரன் பேபி ரன்’ படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, ‘எம்புரான்’ படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதிய முரளி கோபி கதை எழுதியுள்ளார்.
மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘காந்தாரா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். நிகிலா விமல், ரெஜினா, சுனில், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘அனந்தன் காடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி மற்றும் மர்மம் கலந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ‘அனந்தன் காடு’ திரைப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டீசரின் வரவேற்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
