யூடியூப், ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களை உருவாக்கி பிரபலமான பலர் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல்வேறு துறைகளில் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகின்றனர். இந்த புதிய போக்கு தற்போது ஹாலிவுட்டிலும் வேகமாக பரவி வருகிறது.
26 வயதான கர்ரி பார்க்கர் என்ற இளைஞர், யூடியூப்பில் பதிவேற்றியிருந்த ஒரு குறும்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளரின் கவனத்தை ஈர்த்தார். அந்த குறும்படத்தை பார்த்த தயாரிப்பாளர் அவரை நேரடியாக அணுகியதன் விளைவாக உருவான திரைப்படம்தான் ‘அப்செஷன்’. சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த மே மாதத்தில் வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது 156 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘பேக்ரூம்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த மே 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், வெளியான நான்கைந்து நாட்களிலேயே 126 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான வசூலைக் குவித்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கிய கேன் பார்சன்ஸ், சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பெயரில் யூடியூப்பில் வெளியிட்டிருந்த சீரிஸ் வீடியோக்களின் சினிமா வடிவமாகவே ‘பேக்ரூம்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் பெற்றிருக்கும் மிகப்பெரிய வரவேற்பும், வசூல் சாதனைகளும் ஹாலிவுட் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோன்ற வகையில் யூடியூப் மூலம் பிரபலமான சிலர் இயக்கி, நடித்துள்ள திரைப்படங்கள் விரைவில் தமிழ் சினிமாவிலும் வெளியாக உள்ளன.
