பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் ரன்வீர் சிங். அவரது நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் சாதனைகளைப் படைத்தன. இந்த நிலையில், அவரைச் சுற்றி புதிய சர்ச்சை ஒன்று உருவாகி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, ‘டான் 3’ திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் ஒப்புதல் அளித்திருந்த ரன்வீர் சிங், அந்த திரைப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த சமயத்தில் திடீரென அந்த திட்டத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக, அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ரிதேஷ் சித்வானி மற்றும் பர்ஹான் அக்தர் ஆகியோர், ரன்வீர் சிங்கின் இந்த முடிவால் தங்களுக்கு சுமார் ரூ.45 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ரன்வீர் சிங் பணியாற்றும் திரைப்படங்களுக்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு பாலிவுட் திரைப்பட வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தனது தரப்பை வலியுறுத்தும் வகையில் ரன்வீர் சிங், திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு எதிராக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கில்டு அமைப்பு ஆகியவை தலையிட்டு இரு தரப்பினரிடையேயும் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரன்வீர் சிங் மீது விதிக்கப்பட்டிருந்த ஒத்துழைப்பு தடை திரும்பப் பெறப்பட்டது. மேலும், ரன்வீர் சிங் அனுப்பிய சட்ட நோட்டீஸின் தாக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதாக பாலிவுட் திரையுலக வட்டாரங்களில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
