எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் – இசைஞானி இளையராஜா!

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்த ராமசாமி – சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாக 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி பிறந்த டேனியல் ராசைய்யா என்கிற ஞானதேசிகன், இன்று இசை உலகின் அரசனாக திகழும் இளையராஜாவாக தனது 83வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வழக்கமாக அவரது பிறந்தநாளன்று ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதலே சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் ரசிகர்கள் திரண்டனர். அங்கு வந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களின் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் இளையராஜா.

இந்த நிலையில், இன்று மாலை பெங்களூருவில் நடைபெறவுள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக தயாராகி வருவதாகவும், அதற்காக புறப்பட வேண்டியிருந்தாலும் ரசிகர்களின் அன்பான வாழ்த்துகளை மனமார ஏற்றுக்கொள்வதாகவும் இளையராஜா தெரிவித்தார். மேலும், அனைவரும் அமைதியாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பிறந்தநாளில் என்னை வாழ்த்தும் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர்கள் காட்டும் அன்புக்கும் பாசத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் என்று அவர் கூறினார்.

இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய் தனது வாழ்த்து செய்தியில், “இசைஞானி இளையராஜாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தேனி மாவட்டத்தின் பண்ணைப்புரம் கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி, உலகப் புகழ்பெற்ற சிம்பொனி இசை வரை எண்ணற்ற சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாக விளங்கி வருகிறார். உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு ஒளிவிளக்காகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக திகழும் தங்களுக்கு எங்களின் அன்பும் மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்தில், “உங்கள் இசை, உங்கள் வயதை விட பல நூறு மடங்கு காலம் வாழும். அதைப் போலவே நீங்களும் எங்களின் அனைத்து பேராசைகளையும் தாண்டிய நீண்ட ஆயுளுடன் இசையோடு வாழ வேண்டும்” என்று தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், “இசையால் நம்மை என்றும் ஆளும் இசைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த பேரன்பின் காரணமாக தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக்கொண்டவர். ‘இசைஞானி’ என்ற பட்டத்தை கலைஞர் வழங்கினார். அன்னக்கிளியில் தொடங்கிய இசைப் பயணம் சிம்பொனி வரை வெற்றிகரமாக தொடர்கிறது. ராஜா என்றும் ராஜாதான்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்தில், “இசையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற கலைத்தாயின் தவப்புதல்வர் இசைஞானி இளையராஜாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஐம்பது ஆண்டுகளாக மொழி, இனம், வயது, நாடு போன்ற எல்லைகளைத் தாண்டி நிலைத்திருக்கும் அற்புதமான இசையை வழங்கி வருகிறார். பல கோடி மக்களின் உணர்வுகளுக்கு மருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் இளையராஜா நூறாண்டுகளுக்கும் மேலாக நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இளையராஜா வெளியிட்ட நன்றி வீடியோவில், “எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்த வாழ்த்துக்கும் நன்றி. மேலும் நாடு முழுவதிலும் இருந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேரில் வந்து என்னை வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading