ஹைபர்லிங்க் கிரைம் திரில்லரான ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மூன்றாம் கண்’. இந்தப் படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி மற்றும் சுந்தரா டிராவல்ஸ் ராதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் கே. சசிகுமார் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ள நிலையில், என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ராஜ் பிரதாப் பின்னணி இசையை அமைத்துள்ளார்.

ஹைபர்லிங்க் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த திரைப்படம், வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் குறித்து இயக்குநர் சசோ கணேசன் பேசுகையில், “ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திடீரென கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையை தாங்கள்தான் செய்ததாக நான்கு பேர் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவரே உண்மையான குற்றவாளி. அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதுதான் கதையின் மையக்கரு” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் வழக்கமான காதல் காட்சிகள் இடம்பெறாது என்றும், சந்தோஷ் பிரதாப் கற்பனை கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தின் திரைக்கதையில் பல புதிய முயற்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் கதை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நிஜமாக இயங்கி வந்த தொழிற்சாலையில் கொலைக்காட்சி படமாக்கப்பட்டபோது, அங்கு பணியாற்றியவர்கள் அது உண்மையான சம்பவம் என நினைத்து பயந்துவிட்டதாகவும் அவர் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகிற 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading