நடிகர் கவுதம் ராம் கார்த்திக், ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் குறைந்த பட்ஜெட்டில் உருவான பல படங்களில் நடித்த அவர், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஆகஸ்ட் 16, 1947’, ‘பத்து தல’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்களாக அமைந்தன. இதற்கிடையில், நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டு தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
‘டாடா’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குநர் கணேஷ் கே. பாபு, தற்போது நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை தினா ராகவன் எழுதி இயக்கியுள்ளார். கவுதம் ராம் கார்த்திக்கின் 19வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம், கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்திற்கு இயக்குநர் ராஜூமுருகன் வசனம் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்களை யுகபாரதி, கணேஷ் கே. பாபு மற்றும் சௌமியா பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். அரசியல் பின்னணியைக் கொண்ட வலுவான கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் அஞ்சனா நேத்ருன், செல்வராகவன், ரோபி, பி. வாசு, வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர் மற்றும் பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் கவுதம் ராம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, கொடிக்கம்பத்தின் அரசியல் அடையாளம் மற்றும் அதன் பின்னணியை மையமாகக் கொண்ட வசனங்கள் பெரும் கவனத்தைப் பெற்றன. சி.என். அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை அரசியல் குறிப்புகளை உள்ளடக்கியதாக இந்த டீசர் அமைந்திருந்தது. இந்நிலையில், ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
—
